சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தது விவசாயிகளுக்கு எதிரான செயல் - அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
வேளாண் மண்டல மசோதா சட்டசபையில் கொண்டு வந்த போது மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தது விவசாயிகளுக்கு எதிரான செயல் என்று விருத்தாசலத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
விருத்தாசலம்,
புவனகிரி சட்டமன்ற தொகுதியின் அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகிய முப்படைகள் சந்திப்பு கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொது செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில சொத்து பாதுகாப்புக் குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் தமிழரசி, மாநில துணை பொதுச்செயலாளர் சன் முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் கோபி, சசிகுமார், நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் இளைஞர்கள், இளம் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். தொடர்ந்து தம்பிகள் படை மற்றும் தங்கைகள் படைகளை சேர்ந்தவர்களுடன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செல்பி எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து நிருபர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2015-ம் ஆண்டு பா.ம.க. வரைவு தேர்தல் அறிக்கையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்து இருந்தோம். இதை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி இருக்கிறார். கோடிக்கணக்கான விவசாயிகள் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்துள்ளார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் செய்ததை விவசாயிகளுக்கு எதிரான ஒரு செயலாக நான் காண்கின்றேன்.
காலம் காலமாக டெல்டா பகுதிகள் நமக்கு உணவு அளித்துக் கொண்டே இருக்கிறது. அதில் விவசாயிகளுக்கு எதிரான எந்தவித திட்டங்களையும் கொண்டு வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் முதன்முதலில் இந்த சட்டம் கொண்டுவர பா.ம.க. குரல் கொடுத்தது. இந்த சட்டம் வருகின்ற நேரத்தில தி.மு.க. அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தது தி.மு.க. விவசாயிகளின் எதிரி என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய கெமிக்கல் பூங்கா கொண்டு வர தி.மு.க. ஆட்சியில் தான் திட்டமிட்டார்கள்.
என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை பாழாக்கி வருகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கவில்லை. நிலத்தடி நீரும் 800 அடிக்கு கீழ் சென்று விட்டது. இதை உடனடியாக என்.எல்.சி. நிர்வாகம் சரி செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி.யை மூடி விட்டு செல்லுங்கள். எங்களுக்கு தேவையில்லை. எந்தவித போராட்டத்தை நடத்திடவும் தயாராக உள்ளோம். ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விருத்தாசலம் பரங்கிப்பேட்டை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சாலையில் பா.ம.க. சார்பில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், சமட்டிக்குப்பம் ஆறுமுகம், முதனை செல்வராசு, முருகன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் கலைமதி, முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், வைதேகி கோதண்டம், சக்திவேல், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், துணை செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஞானவேல், தலைவர் செந்தில், நகர செயலாளர் விஜயகுமார், முன்னாள் நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தியா பானு, லட்சுமணன், ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ஏழுமலை நன்றி கூறினார்.