நாகியம்பட்டியில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற காளையர்கள் 20 பேர் காயம்

நாகியம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். மாடுகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-02-22 23:30 GMT
தம்மம்பட்டி,

தம்மம்பட்டியை அடுத்துள்ள நாகியம்பட்டியில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதையொட்டி நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாம் எதிரில் உள்ள தனியார் நிலத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. மேலும் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கும், பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் காளைகள் புகுந்து விடாமல் இருக்கவும் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதுமட்டுமின்றி மைதானத்தில் தென்னைநார் பரப்பப்பட்டு இருந்தன.

சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான காளைகளை, அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறையை சேர்ந்த மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர். இதில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதி இல்லாத காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மொத்தம் 690 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

உறுதிமொழி

இதே போல 282 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் தம்மம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சதீ‌‌ஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மருதமுத்து, சின்னதம்பி மற்றும் கெங்கவல்லி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் ஸ்ரீகுமரன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் கலெக்டர் ராமன் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க துடித்தனர். காளையை பிடிக்க முயன்றபோது வீரர்களின் பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளிக் குதித்தபடி ஓடின. அதேபோல் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து கொண்டு, மல்லுகட்டியபடி சிறிது தூரம் சென்றனர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், சைக்கிள், குக்கர், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கினர்.

20 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் நாகியம்பட்டியை சேர்ந்த ஹரி (வயது 22), மகேந்திரன் (32), திருச்சியை சேர்ந்த இளவரசன் (23), தாதகாப்பட்டியை சேர்ந்த தினே‌‌ஷ் (22) ஆகிய 4 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், நாகியம்பட்டியை சேர்ந்த பெருமாள் (55) ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

ஜல்லிக்கட்டை தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம், கெங்கவல்லி, துறையூர், சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்