தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது; அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
தமிழகத்தில் தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தி இதுவரை 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனஅமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
திருப்பத்தூர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. சென்னை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் வே.மீனாட்சி தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார்.
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:–
தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தோடு வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் மூலம் இதுவரை 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் நடத்தி அனைவருக்கும் வேலை கிடைக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் 80–க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றன. இதில் 3 ஆயிரம் பேர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தனர் 500 பேருக்கு அங்கேயே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
முகாமில் கல்லூரி முதல்வர் மரியஅந்தோணி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் டி.டி.குமார், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் செல்வம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குனர் கா.பரமேஸ்வரி நன்றி கூறினார்.