ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; மத்திய உள்துறை இணை மந்திரி பேச்சு

ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று மத்திய உள்துறை இணை மந்திரி கிஷான்ரெட்டி பேசினார்.

Update: 2020-02-22 22:30 GMT
அரக்கோணம், 

அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சப்–இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் ராஜேஷ்ரஞ்சன் வரவேற்று பேசினார். ஐ.ஜி. விக்ரம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷான்ரெட்டி கலந்து கொண்டு, திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அணிவகுப்பில் பஞ்சாப், உத்தரபிரதேசம், ஒடிசா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து பயிற்சியை நிறைவு செய்த சப்–இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்–இன்ஸ்பெக்டர்கள் என 85 பெண்கள் உள்பட 1,160 பேர் கலந்து கொண்டனர்.

வீரர்களின் அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர் மத்திய மந்திரி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார். தனித்திறமை காட்டிய வீரர்களுக்கு கேடயம், கோப்பைகளை வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :–

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இங்கு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சப்–இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்–இன்ஸ்பெக்டர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். இந்த வீரர்களை தேசப்பணிக்காக அனுப்பி வைத்த அவர்களின் பெற்றோர்களை போற்றி வணங்குகிறேன்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பங்கு தேசத்தின் பாதுகாப்பு, அமைதி இவற்றிற்கு இன்றியமையாதது ஆகும். நாட்டிற்காக எத்ததைய தியாகத்தையும் செய்ய உறுதிமொழி ஏற்று கடமையாற்ற வந்துள்ள இவர்களை தேசமே போற்ற கடமைப்பட்டுள்ளது.

நாட்டின் அமைதியை கெடுக்க முயலும் கலகக்காரர்கள், தீயசக்திகள், நக்சலைட் போன்றவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கவும், ஒழிக்கவும் இந்த வீரர்கள் பணிபுரிந்து அமைதியை காப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதில், இந்த வீரர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எத்தகைய சவால்களையும், அச்சுறுத்தல்களையும், சமாளிக்க திறமையான பயிற்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றது.

விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, சு.ரவி எம்.எல்.ஏ., தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், வீரர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்