திட்டங்களை தடுப்பதாக தவறான தகவலை பரப்புகின்றனர் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவு

திட்டங்களை தடுப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்று கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-02-22 00:18 GMT
புதுச்சேரி,

புதுவை சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது கவர்னர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். குறிப்பாக புதுச்சேரிக்கான திட்டங்களை தடுக்கிறார், அதிகாரிகளை மிரட்டுகிறார் என்று தெரிவித்தார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் மாளிகை அலுவலகம் எந்தவொரு நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நிதித்துறையின் முன்மொழியப்பட்ட திட்டத்தை தடுத்ததில்லை. திட்டங்களை தடுப்பதாக முற்றிலும் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

சென்டாக் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. மாணவர்களை மிரட்டி தொடர்ந்து பணம் பறிக்க அவர்களுக்கு அதிகாரம் தந்தது யார்? அதை புலனாய்வாளர்களுக்கு வெளிப்படுத்தும் கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

புதுவையில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு பெற மசோதாவை நிறைவேற்றப்போவதாக கூறியிருப்பது நல்லது. அது சிக்கல் இல்லாமல் இருக்கவேண்டும். கவர்னர் மாளிகையில் ஒருநபர்கூட கூடுதல் பணியாளர் இல்லை. மனித வளத்தை வீணாக்குவதை நான் விரும்பவில்லை.

அமைச்சருக்கு வேதனையை ஏற்படுத்தும் காரணங்களை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். நானும் அவருக்காக அனுதாபப்படுகிறேன்.

அமைச்சருக்கு நான் சில கலர் பலூன்களை பரிசளிக்க விரும்புகிறேன். ஏனெனில் நான் ஏனாம் செல்லும்போது அவர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு வரவேற்கிறார். அதனுடன் சேர்த்து கலர் பலூன்களை பறக்கவிடட்டும். வருகிற மே மாதம் நான் மீண்டும் ஏனாம் செல்ல உள்ளேன்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி அந்த பதிவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்