நெல்லை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும் ஆணையாளர் கண்ணன் தகவல்
நெல்லை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும் என்று ஆணையாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தீவிர நடவடிக்கை
நெல்லை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் அதிக அளவு நிலுவையில் உள்ளதால், வரி செலுத்தாதவர்கள் பட்டியலின்படி அவர்களது கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிக அளவு வரி நிலுவை வைத்துள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல், மின் இணைப்பு துண்டிப்பு செய்ய பரிந்துரைகள் ஆகிய பணிகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத நிலுவைதாரர்கள் குறித்த பெயர் பட்டியல் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகளில் ‘பிளக்ஸ் போர்டுகள்’ மூலம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
கணினி வரி வசூல் மையம்
எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, உரிமக்கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம், மாநகராட்சி கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். மேலும் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் வருகிற அடுத்த மாதம் (மார்ச்) 31–ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.