தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-21 23:30 GMT
தென்காசி, 

தென்காசி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்தார்.

தாய்ப்பால் வங்கி 

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் அகத்தியன், பொது சுகாதார துணை இயக்குனர் முகைதீன் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தாய்ப்பால் வங்கியை திறந்து வைத்தார். பின்னர் இதன் செயல்பாடுகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அரசு டாக்டர் அப்துல் அஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் கீதா நன்றி கூறினார்.

தாய்ப்பால் வங்கி குறித்து கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் கூறியதாவது:–

பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் கண்டிப்பாக தாய்ப்பால் வழங்க வேண்டும். இதனால் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், இருதய வியாதி மற்றும் மூட்டுவலி வரும் வாய்ப்பை குறைக்கிறது. மனச்சோர்வு நோய், அதிக ரத்தப்போக்கு வராமல் தடுக்கிறது. எடை குறைப்புக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. நிமோனியா, வயிற்றுப்போக்கு மற்றும் ஒவ்வாமை வராமல் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி 

ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த வங்கியில் தாய்மார்களிடம் தாய்ப்பால் எடுக்கும் பம்பிங் மிஷின் உள்ளது. இந்த மெஷின் மூலம் தாய்ப்பால் எடுக்கப்பட்டு அது மற்றொரு எந்திரம் மூலம் பக்குவப்படுத்தப்படுகிறது. பின்னர் பக்குவப்படுத்தப்பட்ட பால் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அதில் கிருமிகள் எதுவும் உள்ளனவா? என்று ஆய்வு செய்யப்படுகிறது. கிருமிகள் இருந்தால் அந்தப் பால் அழிக்கப்படும். சுத்தமான பால் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுகிறது. இதற்கென பிரத்யேகமாக உள்ள 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 மாதம் வரை இந்த பால் கெடாமல் இருக்கும். இந்த வங்கியில் இருந்து ஆஸ்பத்திரியில் தேவைப்படும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கப்படும்.

குழந்தை பிறந்தவுடன் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும். அந்த நிலையில் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது. தொடர்ந்து நான்கு நாட்கள் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் அது கட்டியாகி மீண்டும் பால் வராமல் போய்விடும். இதனால் அந்தப் பாலை தாய்மார்கள் பீய்ச்சி வெளியேற்றி விடுவார்கள். இதுபோன்று தினமும் அரசு ஆஸ்பத்திரியில் 4 முதல் 5 தாய்மார்கள் வரை செய்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் அந்த பாலை வங்கியில் சேமித்து வைப்போம். மேலும் தாய்ப்பால் தானமாக கொடுக்க விரும்பும் அனைத்து தாய்மார்களும் இந்த வங்கியில் தாய்ப்பால் கொடுத்து தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உதவலாம். தாய்ப்பால் குறைந்த எடை குறைந்த குழந்தைகள், நோய்வாய்ப்பட்டு குழந்தைக்கு தாய்ப்பால் தர இயலாத தாய்மார்களின் குழந்தைகள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோருக்கு இது வழங்கப்படுகிறது.

தொடர்பு கொள்ளலாம் 

இதனை யாரெல்லாம் தரலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. தன் குழந்தைக்கு போக பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் வழங்கலாம். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தாய்ப்பால் அருந்த இயலாத குழந்தைகளின் தாய்மார்கள் வழங்கலாம். இதே நேரத்தில் எச்.ஐ.வி. போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், மார்பக புற்றுநோய் உள்ளவர்கள், கீமோதெரபி சிகிச்சை எடுக்கும் தாய்மார்கள் ஆகியோர் இதனை தரக்கூடாது. தாய்ப்பால் தானம் தர விரும்பும் தாய்மார்கள் தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி தாய்ப்பால் வங்கி போன் எண்கள் 63747 12846, 04633 281161 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு டாக்டர் ஜெஸ்லின் கூறினார்.

மேலும் செய்திகள்