பணம் பறிக்க முயன்ற மத்திய அரசு ஊழியர் கைது 100 பேரை போலீசில் சிக்க வைத்த மதுபான உரிமையாளரிடம் மாட்டிக்கொண்டார்
மதுபான விடுதி உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்ற மத்திய அரசு ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மதுபான உரிமையாளர் தன்னிடம் பணம் பறிக்க முயன்ற 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசில் பிடித்து கொடுத்தவர்.
மும்பை,
மும்பை மெரின் டிரைவ் பகுதியில் அசோக் பாட்டீல் என்பவர் மதுபான விடுதி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது மதுபான விடுதிக்கு தாதரை சேர்ந்த ராஜேந்திர வாக்மாரே(வயது47) என்பவர் வந்தார். ராஜேந்திர வாக்மாரே மஜ்காவில் உள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதையடுத்து அவர் மதுபான விடுதி உரிமையாளர் அசோக் பாட்டீலை சந்தித்து, நீங்கள் நடத்தி வரும் மதுபான விடுதிக்கு முறையான அனுமதி பெறவில்லை. எனவே இது குறித்து புகார் அளிக்காமல் இருக்க மாதந்தோறும் தனக்கு ரூ.7 லட்சம் தரவேண்டும் என மிரட்டினார்.
4 பேர் கைது
இதைத்தொடர்ந்து மதுபான விடுதி உரிமையாளர் பிறகு பணம் தருவதாக கூறி, அவரை அனுப்பிவிட்டு நேராக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பணம் தருவதாக நேற்று ராஜேந்திர வாக்மாரேயை மதுபான விடுதிக்கு அழைத்தார். இதையடுத்து அங்கு வந்த அவரை, மெரின் டிரைவ் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் சஞ்சய் அகிரே, ஜனார்தன் ஜியானித், மனிஷ் தாம்பே ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியரை பிடித்து கொடுத்த மதுபான விடுதி உரிமையாளர் அசோக் பாட்டீல், கடந்த 25 ஆண்டுகளில் இதுவரை அவரிடம் பணம் பறிக்க முயன்ற போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், கலால்துறையினர், வருமான வரித்துறையினர் என 100-க்கும் மேற்பட்டவர்களை, புகார் அளித்து போலீசில் சிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.