சின்னசேலம் அருகே, மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

Update: 2020-02-20 22:00 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்(வயது 55), விவசாயி. இவர் சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனது மகள் வசந்தி வீட்டில் தங்கி, விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். சம்பவத்தன்று வயலுக்கு சென்ற சிவலிங்கம் விவசாய வேலை முடிந்ததும், மாலையில் ஒரு சைக்கிளில் புல் கட்டுகளை வைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காளசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சிவலிங்கம் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் காயமின்றி உயிர்தப்பினார். மேலும் இந்த சம்பவம் குறித்து சிவலிங்கத்தின் மகன் மாதேஸ்வரன் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்