பஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்களிடம் பேச டிரைவர்களுக்கு தடை - அரசு போக்குவரத்து கழக அதிகாரி உத்தரவு
பஸ்சில் முன்சீ்ட்டில் உட்காரும் பெண்களிடம் பேச டிரைவர்களுக்கு அரசு போக்குவரத்து கழக அதிகாரி தடை விதித்து உள்ளார்.
விபத்து தடுப்பு நடவடிக்கை
அரசு பஸ்கள் விபத்தில் சிக்காமல் தடுக்க போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மண்டலத்தில் இரவு நேரத்தில் டிரைவர்கள் பஸ்சை இயக்கும் போது விபத்துகள் ஏற்படாமல் தடுக்க கண்டக்டருக்கு முன் பகுதியில் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அரசு பஸ்களில் பகல் நேரங்களில் டிரைவர்கள் பெண்களை கண்டக்டர் இருக்கை, மற்றும் என்ஜின் மீது(பேனட்) அமர அனுமதிப்பதாலும், பெண்களுடன் பேசிக்கொண்டே செல்வதாலும் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் (இயக்குதல்) பொது மேலாளர் மகேந்திரகுமார் கூறியதாவது:-
2,700 அரசு பஸ்கள்
கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மொத்தம் 2,700 பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் டவுன் பஸ்கள் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 1,190 பஸ்கள் இயக்கப்படுகிறது.
பெண்களிடம் பேச தடை
அரசு பஸ்கள் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பஸ்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கவனக்குறைவாக பஸ்களை இயக்க கூடாது என்பன உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இது குறித்து அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில் பெண் பயணிகள் என்ஜின் மற்றும் முன் இருக்கையில் அமரும்போது அவர்களிடம் சில டிரைவர்கள் பேசிக் கொண்டே செல்கின்றனர். அப்போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படு வதாக புகார்கள் வந்துள்ளது.
இதனையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அரசு பஸ் டிரைவர்கள் என்ஜின் மீது(பேனட்) பெண்களை அமர வைக்க கூடாது. முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக் கூடாது என தடைவிதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனை டிரைவர்கள் கடைபிடித்து பாதுகாப்பாகவும், முழு கவனத்துடனும் பஸ்களை இயக்க வேண்டும். இதனால் கவனக் குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகள் முழுவதுமாக தடுக்கப்படும்.
செல்போனுக்கு தடை
அரசு பஸ்களை இயக்கும் டிரைவர்கள் செல்போன் வைத்து இருக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. செல்போனை வைத்து இருப்பது தெரியவந்தால் அவர்கள் 2 நாட்களுக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதுபோன்று கடந்த வாரம் 2 டிரைவர்கள் செல்போன் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.