மதுவிற்பனையை படிப்படியாக குறைக்க நடவடிக்கை நாராயணசாமி உறுதி

புதுவையில் மதுவிற்பனையை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2020-02-20 00:24 GMT
புதுச்சேரி,

புதுவை சமூக நலவாரியம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், சமூக நீதி மற்றும் அதிகார பகிர்ந்தளித்தல் அமைச்சகத்தின் உதவியுடன் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான 2 நாள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு கல்வித்துறை கருத்தரங்க கூடத்தில் நடந்தது. சமூக நலவாரிய தலைவி வைஜெயந்தி வரவேற்று பேசினார். கருத்தரங்கில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். அவரை புரட்சி முதல்வர் என்று அடைமொழியிட்டு அறிமுகப்படுத்தினார்கள்.

கருத்தரங்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்து பேசியதாவது:-

புரட்சி முதல்வர்

புதுவையில் புரட்சி முதல்வர், மக்கள் முதல்வர் என்று யாரும் இல்லை. மக்கள் முதல்வர் என்று கூறி ஒருவரை தூக்கிப்போட்டுவிட்டனர். மக்கள் மனது வைத்தால்தான் முதல்-அமைச்சர் பதவி. மக்கள் சக்திதான் மகத்தான சக்தி. பதவியில் இருக்கும்போது பாராட்டுகள் வரும். பதவி இல்லாவிட்டால் எங்கேயோ தூக்கிவைத்து விடுவார்கள்.

போதைப்பொருள் பற்றிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு. போதைப்பொருள் தடுப்பதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினருடன் நான் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு சென்றுள்ளேன்.

அங்கு பாப்பி என்ற செடிகள் பயிரிடப்படுகின்றன. அந்த செடியின் அனைத்து பகுதிகளும் போதை நிரம்பியது. இந்த பயிர் மூலம் ஏக்கருக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை லாபம் கிடைக்கும். இந்த செடி மருந்துக்காக பயிரிடப்படுகிறது.

உயிர்க்கொல்லி

ஆனால் அதை கள்ள மார்க்கெட்டில் சிலர் போதைப் பொருளுக்காக விற்று விடுகின்றனர். அப்பகுதி மக்கள் இதுபோன்ற போதைப்பொருள் பயிரிட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்கள். இந்த போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் அங்குள்ள குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். ஆனால் அந்த பொருட்கள் மருந்துக்கு தேவைப்படுவதால் அதை ஒழிக்க முடியவில்லை.

போதைப்பொருட்கள் என்பவை ஒரு உயிர்க்கொல்லி. புதுவையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன். அவர்கள் 2 நாட்கள் நடவடிக்கை எடுத்துவிட்டு பின்னர் விட்டுவிடுகின்றனர். இப்போது தொடர் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன்.

தடுத்து நிறுத்தும் பொறுப்பு

இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் மாணவ, மாணவிகள்தான். பள்ளி, கல்லூரிகளின் அருகிலேயே அதிகமாக இவை விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது. திருவண்ணாமலை பகுதியில் இருந்துதான் அதிக அளவில் கஞ்சா விற்பனைக்கு ரெயில் மூலம் வருகிறது.

பெண் தாதா ஒருவர்தான் இதை செய்கிறார். புதுவையில் பெரியார்நகர், வில்லியனூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருபுவனை பகுதிகளில் இது விற்பனை செய்யப்படுகிறது.

முழுமையாக ஒழிக்க முடியாது

மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. ஏனெனில் பெற்றோரைவிட அதிக அளவில் நேரத்தை மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன்தான் கழிக்கின்றனர். எனவே அவர்களை நல்ல வழிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போது நிறைய மறுவாழ்வு மையங்கள் வந்துள்ளன. புதுவையில் மதுவை முழுமையாக ஒழிக்க முடியாது. ஏனெனில் நமது மாநிலத்துக்கு கலால், விற்பனை வரி மூலம்தான் அதிக அளவில் வருமானம் வருகிறது. வருமானத்தை அதிகரிக்கும் அளவுக்கு நமது மாநிலத்தில் மூலப்பொருட்களும் இல்லை.

படிப்படியாக குறைப்பு

எனவே வருகிற வருமானத்தை வைத்துதான் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. மதுவிற்பனையை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப்பொருள் பயன்பாடு என்பது மிகப்பெரிய கொடுமை. அதை ஒழிக்க காவல்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியுள்ளோம். அதற்கேற்ப இப்போது அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் ஒரு பள்ளியிலிருந்து அடுத்த பள்ளிக்கு மாற்றலாகி செல்ல மறுக்கின்றனர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

ருத்ரகவுடு

கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சமூக நல வாரியத்தின் செயலாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார். தொடர்ந்து பல்வேறு நிபுணர்கள் கருத்துரை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்