குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஈரோட்டில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஈரோட்டில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

Update: 2020-02-19 22:15 GMT
ஈரோடு,

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இதுபோல் தமிழகத்திலும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தமாட்டோம் என்றும், குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நிராகரிப்போம் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரானவர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சியினர், அமைப்பினர் இந்த கோரிக்கையை முன்னெடுத்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை நிராகரிப்போம். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாத்துல் உலமா சபை சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஜமாத்துல் உலமாக்கள் சபை சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தை முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தன.

போராட்டத்தை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு ஈரோடு பெருந்துறை ரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் திரண்டனர். பகல் 11 மணி அளவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஊர்வலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் வந்து குவிந்தனர். இதனால் பெருந்துறை ரோட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குவிந்து இருந்தனர்.

குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கக்கூடாது. தேசிய மக்கள்தொகை பதிவேடு கூடாது என்ற கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியபடி அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தில் வந்த பெரும்பாலான மக்கள் மூவர்ண தேசியக்கொடியை கைகளில் ஏந்தி, இந்தியா எங்கள் தாய்நாடு என்ற கோஷத்தையும் முன்வைத்தபடி வந்தனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற 3 முஸ்லிம் இளம்பெண்கள் தங்கள் அங்கியின் மீது வழக்கமாக அணியும் கருப்பு சால்வைக்கு பதிலாக தேசியக்கொடி வண்ணங்களான பச்சை, வெள்ளை, காவி நிற துணிகளை அணிந்து இருந்தனர். 3 பேரும் சேர்ந்து ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பியபடி நடந்து சென்றனர்.

கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையிலான போலீசார் போராட்டக்குழுவினரை தடுத்து கலெக்டர் அலுவலக முற்றுகைக்கு அனுமதி இல்லை என்று போராட்டத்துக்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து போலீஸ் அனுமதியுடன், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் முன்னதாக ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஹபீபுல்லா தாவூதி தலைமை தாங்கினார். முஸ்லிம் அமைப்புகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உலமா சபை நிர்வாகிகள் ஜாபர் அலி, ஹனீபா, சையத் அகமது பாரூக், சலீம், முகமது லுக்மானுல் ஹக்கீம், ஹசன் அலி, சாதிக்பாட்ஷா, சித்தீக், முஷீர், முகமது, நூர்சேட் ஆகியோர் பேசினார்கள். சுமார் 1.30 மணி நேரம் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

முஸ்லிம்கள் போராட்டத்தை முன்னிட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகம், பெருந்துறை ரோடு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, ரமேஷ், ராஜகுமார் மற்றும் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றபோது 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்வலத்தின் முன்பு அணிவகுத்துச்சென்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் இருந்து பெருந்துறை ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் விடப்பட்டன. பெருந்துறை ரோட்டில் இருந்து அரசு ஆஸ்பத்திரி செல்லும் வாகனங்கள் சம்பத்நகர் வழியாக திருப்பி விடப்பட்டன. கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

போராட்டம் முடிந்த பிறகும் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

மேலும் செய்திகள்