வால்பாறையில் நோய் தாக்குதலால் தேயிலை உற்பத்தி பாதிப்பு; விலை குறைந்தது
வால்பாறையில் நோய் தாக்குதல் காரணமாக தேயிலை உற்பத்தி பாதித்து, விலையும் குறைந்தது.
தேயிலை தோட்டங்கள்
கோவை மாவட்டத்தில் சுற்றுலா பகுதியாக விளங்கும் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் தேயிலைச் செடிகளை இலைப்பேன்,தேயிலை கொசு,சிவப்புசிலந்திபூச்சி ஆகிய நோய்கள் தாக்குவது வழக்கம். தற்போது இந்த நோய் தாக்குதல் செடிகளில் அதிகரித்துள்ளதால் பச்சை தேயிலையின் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.இதனால் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் உள்ள தேயிலைத் தோட்டங்களிலும் குறைந்தளவே பச்சை தேயிலை கிடைத்து வருகிறது என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-
தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் தேயிலை செடிகளை பாதித்துள்ள பூச்சிகளையும்,நோய்களையும் கட்டுப்படுத்துவதிலே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.ஆண்டு தோறும் கோடைகாலத்தில் தேயிலைச் செடிகளை சிவப்புசிலந்திபூச்சி தாக்குவது வழக்கம்.அவைகளை கட்டுப்படுத்துவதற்கு உபாசி தேயிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவுரையின் பேரில் பூச்சிக் கொல்லிகள் தெளித்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகரிப்பு
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக தேயிலைக் கொசு தாக்குதல் அதிகரித்து வருகிறது.ஆரம்பகாலத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இருந்த இந்த தேயிலை கொசுக்கள், அங்கிருந்து வால்பாறைக்கு பச்சை தேயிலை இலைகளை விலைக்கு வாங்கி பயன்படுத்த தொடங்கியதால் வால்பாறை பகுதிக்கும் இந்த தேயிலை கொசுதாக்குதல் அதிகரித்துவிட்டது. இந்த தேயிலை கொசுக்கள் அதிகளவில் டீத்தூள் தயாரிப்பதற்கு பயன்படக்கூடிய கொழுந்து தேயிலை இலைகளில் அமர்ந்து தாக்கி அதன் சாற்றை உறிஞ்சி விடுவதால் இலைகள் காய்ந்து கருகிவிடுகின்றது. இதனால் அதிகளவில் கொழுந்து தேயிலை இலைகள் பாதிக்கப்பட்டு பச்சை தேயிலை உற்பத்தி பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.இதே போல இலைபேன்களும் தேயிலை இலையின் சாற்றை உறிஞ்சிவிடுவதால் கொழுந்து இலைகள் பழுத்து காய்ந்து விடுகின்றது.
தடுப்பு நடவடிக்கை
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோடைமழை பெய்வது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு இது நாள் வரை கோடைமழை கிடைக்கவில்லை.மழை கிடைத்தால் இந்த தேயிலையை தாக்கக் கூடிய பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.தற்போது அதிகளவில் தேயிலையை தாக்கி வரும் தேயிலை கொசுவை கட்டுப்படுத்துவற்கு தேயிலைச் செடிகளுக்கு பூச்சி கொல்லி மருந்துகள் அடிப்பதோடு தேயிலைத் தோட்டங்களில் ஆங்காங்கே ஓருவித பசை தடவிய மஞ்சள் நிறபலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் பறக்கும் கொசுக்கள் இந்த பசைதடவிய பலகைகளில் ஓட்டிக் கொள்கின்றன.இதனால் கொசு தாக்குதல் சற்று குறைந்து வருகிறது.இதே போல அதிகளவில் தேயிலைச் செடிகளை தாக்கிவரும் இலைப் பேன்கள் அருகில் உள்ள செடிகளுக்கு பரவிவிடாமல் தடுப்பதற்காக இலைப் பேன் பாதிக்கப்பட்ட செடிகளை சுற்றி துணிகள் கட்டப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விலை வீழ்ச்சி
இந்த நிலையில் டீத்தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலை விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த மாதங்களில் ஒரு கிலோ டீத்தூள் குறைந்தது ரூ.120,110,100 எனவும், அதிக பட்சம் ரூ 200,180,160, எனவும் விற்கப்பட்டது. தற்போது விலை குறைந்து குறைந்த பட்சம் ரூ.90-க்கும் அதிக பட்சம் ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருகிறது.இதனால் டீத்தூள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக டீத்தூள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில் டீத்தூள் விலை உயரும்.ஆனால் இந்த ஆண்டு டீத்தூள் விலை குறைந்துள்ளது. இதனால் போதிய விலை கிடைக்காமல் போனதால் தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே டீத்தூள் ஏல தாரர்கள் டீத்தூளை ஏலத்தில் எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு தேயிலைத் தோட்ட வளர்ச்சிகழகம் (டேன்டீ) தயாரித்த டீத்தூள்கள் விற்கப்படாததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.