கும்மிடிப்பூண்டி அருகே ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின

கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மினி டெம்போவில தர்பூசணி பழங்களுக்கு இடையே பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் சிக்கியது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-19 05:29 GMT
கும்மிடிப்பூண்டி அருகே சிக்கிய செம்மரக்கட்டைகள்
வாகன சோதனை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை காஞ்சீபுரம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் வசந்தி, சாகுல் அமீது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முனிரத்தினம், ராஜாராம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சந்தேகத்திற்கு இடமான ஒரு மினி டெம்போவை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.

செம்மரக்கட்டைகள்
அந்த டெம்போவில் தர்பூசணி பழங்களுக்கு இடையே செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து சென்னைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.

ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் இருந்து சென்னையின் புறநகர் பகுதிக்கு கடத்தப்பட்ட 1 டன் எடை கொண்ட 44 உயர்ரக செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

2 பேர் கைது
இது தொடர்பாக சென்னை மாதவரத்தை சேர்ந்த வேன் டிரைவர் சதீஷ் என்ற கருப்பு சதீஷ் (28), கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தை சேர்ந்த வில்லியம் டேவிட் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட செம்மரகட்டைகளுடன் வேனையும், அதனை கடத்தி வந்த நபர்களையும் போலீசார், கும்மிடிப்பூண்டி வனசரகர் மாணிக்கவாசகத்திடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்