கல்லறைத் தோட்டத்திற்கு நிலம் ஒதுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கல்லறைத் தோட்டத்திற்கு நிலம் ஒதுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நியூ அண்ணா நகர், பெரியார் நகர், சத்யா நகர், ஜோதி நகர் பகுதியை சேர்ந்த திரளான கிறிஸ்தவ குடும்பத்தினர் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும், மேலே குறிப்பிட்ட நகர் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இறப்பு ஏற்படும் சமயங்களில் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்து வந்தோம். தற்போது இந்த கல்லறை நிறைந்து விட்டதால் அங்கு அடக்கம் செய்ய முடியவில்லை.
மேலும் இந்த கல்லறைத் தோட்டமானது 4 கிலோ மீட்டர் தூரம் ரெயில்வே பாதையை கடந்து கல்லறை தோட்டத்திற்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் இறந்துபோனால் எங்கு அடக்கம் செய்வது கேள்விக்குறியாக உள்ளது.
நடவடிக்கை எடுப்பதாக...
எனவே நாங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அண்ணனூர் ரெயில்வே பாதை ஓரமாக இந்துக்கள் மயானத்திற்கு பக்கத்தில் இருக்கும் அரசு நிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டத்திற்கு நிலம் ஒதுக்கி தருமாறு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம்.
இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே எங்களுக்கு மேற்கண்ட இடத்தில் கல்லறை தோட்டத்திற்கு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தலைமையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.