பஸ்-வேன் மோதல்; பெண் சாவு காயமடைந்த 30 பேருக்கு தீவிர சிகிச்சை
சாயல்குடி அருகே பஸ்-வேன் மோதிய விபத்தில் ஒரு பெண் இறந்தார். மேலும் காயமடைந்த 30 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாயல்குடி,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிலர் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு பின்பு அங்கிருந்து ராமேசுவரத்திற்கு சுற்றுலா பஸ்சில் இரவு வந்து கொண்டிருந்தனர். சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது.
மோதிய வேகத்தில் பஸ்சும், வேனும் நிலைதடுமாறி கவிழ்ந்தன. இதில் சுற்றுலா பஸ்சில் இருந்த சாரதா பாண்டே(வயது 60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
மேலும் இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சாயல்குடி தீயணைப்பு வீரர்கள், கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலாடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக சாயல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.