ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினரிடம் பணம், செல்போன் திருட்டு பார்வையாளர் போல் நடித்து வாலிபர் கைவரிசை

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பார்வையாளர் போல் நடித்து நோயாளியின் உறவினரிடம் பணம், செல்போன் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-02-18 22:30 GMT
சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பாதுகாப்பு கருதி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நோயாளியுடன் தங்க அவரது உறவினர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த பவானி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் 4-வது மாடியில் உள்ள 143-வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த பவானியை பார்ப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பனையூரை சேர்ந்த பவானியின் மருமகன் முருகன் உள்பட 4 பேர் வந்தனர்.

பார்வையாளர் போல் வந்த வாலிபர்

நோயாளியுடன் தங்குவதற்கு ஒருவரை தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லாததால், முருகன் உள்பட 4 பேரும் வார்டுக்கு வெளியே படுத்து தூக்கினர். இதையடுத்து காலையில் முருகன் கண்விழித்து பார்த்தபோது தனது செல்போன் மற்றும் பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில், அதிகாலை 3 மணி அளவில் பார்வையாளர் போல் வந்த வாலிபர் ஒருவர் மருத்துவமனையின் ஒவ்வொரு மாடியாக ஏறி செல்கிறார்.

பணம், செல்போன் திருட்டு

அப்போது பவானி சிகிச்சை பெற்று கொண்டிருந்த வார்டுக்கு வெளியே நிறைய பேர் தூங்கிக்கொண்டுள்ளனர். அதனை கண்ட அந்த வாலிபர் சுற்றி முற்றிலும் பார்த்து, முருகன் அருகில் மெதுவாக போய் படுத்துக்கொள்கிறார்.

திடீரென அசந்து தூங்கிக்கொண்டிருந்த முருகனின் பாக்கெட்டில் நைசாக கையை விடும் அந்த வாலிபர், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

குற்றச்சாட்டு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனியார் காவலர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும், இது போல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மருத்துவமனை வளாகத்துக்குள் இது போன்ற ஆசாமிகளின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்