டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் ஆய்வு செய்தார்.

Update: 2020-02-18 23:30 GMT
திருச்செந்தூர்,

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் ஆய்வு செய்தார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா 

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 22–ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து மணிமண்டபம் அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏராளமான பயனாளிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் அவர், பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவேற்றப்பட்ட பல்வேறு புதிய திட்டப்பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.

போலீஸ் ஐ.ஜி. ஆய்வு 

விழாவை முன்னிட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் நேற்று மதியம் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் வரும் வழித்தடம், விழா மேடைக்கு செல்லும் வழித்தடம், வாகன நிறுத்துமிடங்கள், மேடை கட்டமைப்புகள் போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்... 

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இருதய நோய் சிறப்பு பிரிவு, சிறுநீரக டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்டவற்றையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து பார்வையிட உள்ளார். இதையொட்டி, தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு அருகே விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெயமணி, உதவி மருத்துவ அலுவலர் ஜெயபாண்டியன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்