போலீஸ் தடியடியை கண்டித்து மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் கடையடைப்பு
சென்னையில் நடந்த போலீஸ் தடியடியை கண்டித்து மந்தாரக்குப்பத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந்தேதி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு நடத்த அரசியல் கட்சியினர் முடிவு செய்தனர். அதற்கு அனைத்து வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அதன்படி நேற்று மந்தாரக்குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மருந்து கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் மந்தாரக்குப்பத்தில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் மந்தாரக்குப்பத்தில் உள்ள கெங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே அரசியல் கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பிச்சை தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் முஸ்லிம்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும், சென்னையில் நடந்த போலீஸ் தடியடியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.