பாரதீய ஜனதா ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் வேதனை

பாரதீய ஜனதா ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கூறினார்.

Update: 2020-02-18 00:23 GMT
புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு இடஒதுக்கீட்டை தகர்த்தெறிந்து வருகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இடஒதுக்கீட்டுக்காக மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதற்காக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசை பாராட்டுகிறேன். அதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

கவர்னர் கிரண்பெடி புதுவை மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது முக்கியமானது. அந்த பதவியை வகிக்கும் ரங்கசாமியும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தங்களது நிலை என்ன என்பதை தெளிவு படுத்தவில்லை.

தற்போது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா அரசை இந்துத்துவா அமைப்புகள்தான் வழிநடத்துகின்றன.

கடந்த காலங்களைவிட தற்போது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு எதிராக பாரதீய ஜனதா ஆட்சி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறமாட்டேன் என பிரதமர் கூறியிருப்பதன் மூலம் தான் ஒரு சர்வாதிகாரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்துள்ளார். கொரோனாவை விட கொடுமையான வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. ஆனால் இதைப்பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.

பேட்டியின்போது மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உடனிருந்தார்.

அதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்