பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் மீண்டும் கைது ஜாமீனில் விடுவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதால் போலீஸ் நடவடிக்கை

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக கைதான காஷ்மீர் மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2020-02-17 23:26 GMT
பெங்களூரு, 

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுனில் கோகுல்ரோடு பகுதியில் கே.இ.எல். தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு காஷ்மீரை சேர்ந்த அமீர், பாஷித், தலேப் ஆகிய 3 மாணவர்கள் சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது. அந்த சமயத்தில் இந்த 3 மாணவர்களும் புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்தியும், பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத் என ஆதரவாக கோஷம் எழுப்பியும் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூகவலைத் தளத்தில் பதிவிட்டனர். இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தேசத்துரோக வழக்கில் கைது

இதற்கு பஜ்ரங்தளம் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதைதொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய 3 மாணவர்களையும் தேசத்துரோக வழக்கில் கோகுல்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 15-ந்தேதி கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், உத்தரவாத பத்திரத்தை எழுதி வாங்கிக்கொண்டு இந்திய தண்டனை சட்டம் 169-வது பிரிவின் படி 3 மாணவர்களையும் ஜாமீனில் விடுவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோகுல்ரோடு போலீஸ் நிலையம் முன்பு இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.

எதிர்ப்பு

இதுகுறித்து ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில், புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் தியாகத்தை கொச்சை படுத்தும் வகையிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும் பல்வேறு அமைப்பினரும், தேசத்துரோக வழக்கில் கைதான மாணவர்களை ஜாமீனில் விடுவித்ததற்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதுபோல் மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மையும், போலீசாரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

3 பேர் மீண்டும் கைது

எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து நேற்று காலை கோகுல்ரோடு போலீசார், காஷ்மீர் மாணவர்கள் 3 பேரையும் மீண்டும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக உப்பள்ளி-தார்வார் போலீஸ் கமிஷனர் திலீப் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீரை சேர்ந்த 3 மாணவர்களும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளோம்’ என்றார்.

மேலும் செய்திகள்