நெல் கொள்முதல் நிலைய பிரச்சினை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் நிலைய பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-17 23:00 GMT
நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அணி, அணியாக வந்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரை சந்தித்து வழங்கினர். கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதித்தனர். ஏற்கனவே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கந்துவட்டி பிரச்சினையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதே போல் சிலர் தங்களது கோரிக்கை மீது கவனத்தை ஈர்க்க தீக்குளிக்க முயற்சி செய்வதால் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கு அருகே ஒருவர் திடீரென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த அரசு ஊழியர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை நோக்கி பாய்ந்து சென்றனர். அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கொட்டாரக்குறிச்சியை சேர்ந்த கணபதி (வயது 59), அ.தி.மு.க. நிர்வாகி என்பது தெரியவந்தது. இதையடுத்து கணபதியையும், அவருடன் வந்திருந்த வேலாயுதம் (75), பிரேம்குமார் (30), கஜேந்திரன் (39) ஆகியோரையும் போலீசார் பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தங்களது பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திலேயே நெல் கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும். இதை மாற்றுவதை கண்டித்து அவர் தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்