ஒன்றிய அலுவலக கழிப்பறையில் இறந்து கிடந்த வாலிபர்

திருவாடானை ஒன்றிய அலுவலக கழிப்பறையில் ஊழியர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-02-16 22:15 GMT
தொண்டி,

திருவாடானை ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் கடந்த ஒரு வருடமாக அலுவலகத்திலேயே தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒன்றிய அலுவலக ஆடிட்டர் அறையில் தங்கியிருந்தார். காலை 8.30 மணி வரை அந்த அறையின் கதவு திறக்கப்படாததால் ஒன்றிய அலுவலக இரவு காவலர் உடையப்பன் அறையின் கதவை தட்டியுள்ளார்.

வெகுநேரம் தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த அறையில் இருந்த கழிப்பறையில் மணிகண்டன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர் உடையப்பன், ஒன்றிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து வந்த திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர் போஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் அறையை சோதனை செய்தனர். பின்பு போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த அரசு டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஒன்றிய அதிகாரிகள் அவரது மனைவி மற்றும் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மணிகண்டன் தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகே உள்ள மடப்புரம் சபாபதி தெருவை சேர்ந்தவர். கருணை அடிப்படையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக திருவாடானை ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு சந்தியா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும், ஒரு விபத்தில் தலையில் ஆபரேசன் செய்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்