கம்பம் பகுதியில், புடலங்காய் விளைச்சல் அமோகம் - விலை குறைவால் விவசாயிகள் கவலை
கம்பம் பகுதியில் புடலங்காய் அமோகமாக விளைச்சல் அடைந்தது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கம்பம்,
கம்பம், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் தென்னை, வாழை, திராட்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக பீட்ரூட், முள்ளங்கி, புடலங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும் விளைகிறது.
கடந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர். குறிப்பாக புடலங்காய் அதிகளவில் சாகுபடி செய்தனர். தற்போது புடலங்காய் அமோகமாக விளைச்சல் அடைந்து பறிக்கப்பட்டு வருகின்றன.
இங்கிருந்து புடலங்காய் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை, திருச்சி பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து அதிகமாக உள்ளதால் வியாபாரிகள் புடலங்காயை குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். அதாவது ஒரு கிலோ புடலங்காய் ரூ.5 முதல் ரூ.7 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை கட்டுப்படியாகாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,‘ கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதை பயன்படுத்தி புடலங்காய் சாகுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து புடலங்காய் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து போனது.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறி பயிர்களுக்கு நிரந்தர விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.