பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து ரே‌ஷன் கடைகளில் உள்ளூர் தயாரிப்பு எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும் த.வெள்ளையன் வலியுறுத்தல்

ரே‌ஷன் கடைகளில் உள்ளூர் தயாரிப்பு எண்ணெய்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று த.வெள்ளையன் வலியுறுத்தினார்.

Update: 2020-02-16 22:30 GMT
நெல்லை, 

பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து, ரே‌ஷன் கடைகளில் உள்ளூர் தயாரிப்பு எண்ணெய்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று த.வெள்ளையன் வலியுறுத்தினார்.

பேட்டி 

நெல்லையில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பொருளாதாரம் சரிவு 

இந்தியாவில் 134 கோடி மக்கள் தொகை உள்ளது. நாட்டின் பொருளாதாரம் சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை காப்பாற்ற ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே மக்கள்தான் பொருளாதார வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டும். அரசு முடிவு எடுத்தால் உடனடியாக தீர்வு காண முடியும். ஆனால் ஆட்சியில் யார் இருந்தாலும் இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

மாறாக அன்னிய நாடுகளை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்களது உற்பத்திக்கும், பொருட்களின் விற்பனைக்கும் மட்டும் உதவி செய்கிறார்கள். சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு கம்பெனிகளை 1991–ம் ஆண்டு காங்கிரஸ் அரசு அனுமதித்து, கதவை திறந்தது. அதை தொடர்ந்து வந்த பா.ஜனதா அரசு கதவை மூடாமல், கதவையே முழுமையாக அகற்றி விட்டது. தற்போது உள்நாட்டு வணிகத்தை முழுமையாக கைப்பற்ற ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதித்து உள்ளது.

ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்ய நுழைந்து, நாட்டை கைப்பற்றினர், அதே போல் தற்போது நமது வியாபாரத்தை வெளிநாட்டினர் கைப்பற்றினர்.

தமிழக அரசு பட்ஜெட் 

தமிழக அரசின் பட்ஜெட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் உள்ளன. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த திட்டமும் இல்லை. சுய தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் இல்லை. தமிழகத்துக்கு பாமாயில் கப்பல் கப்பலாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் உள்ள தீமையை அனைவரும் தெரிந்து பாமாயிலை விலக்க வேண்டும். பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.

தமிழக அரசு ரே‌ஷன் கடைகளில் பாமாயில் விற்பனை செய்வதை நிறுத்தி விட்டு, உள்ளூர் தயாரிப்பு ரகங்களில் இருந்து நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உள்ளூர் ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டுகளையும் வழங்க வேண்டும்.

சென்னையில் மாநாடு 

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 5–ந் தேதியை வணிகர் தின மாநாடாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு 37–வது வணிகர் தின மாநாட்டை சென்னை தீவு திடலில் நடத்துகிறோம். இதில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மக்கள் நலன் சார்ந்த, நாட்டின் நலன், பொருளாதார மேம்பாட்டுக்கான முடிவுகள் எடுக்கப்படும். இதில் தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாநில பொதுச் செயலாளர் சி.எல்.செல்வம், நெல்லை மாவட்ட வர்த்தக கழக தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் மீரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நலச்சங்கம் 

முன்னதாக வெள்ளையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நெல்லை டவுனில் நடைபெற்ற நெல்லை மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கத்தை வெள்ளையன் தொடங்கி வைத்தார். இதில் சங்க தலைவர் முருகன் என்ற காசி, செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் திரவியராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பாளையங்கோட்டை பஸ்நிலைய வியாபாரிகள் சங்க இணைப்பு விழாவில் வெள்ளையன் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். செயலாளர் அமிர்தராஜ் வரவேற்றார். இதில் பொருளாளர் ஷேக் முகமது, நெல்லை மாவட்ட உள்ளாட்சி கூட்டமைப்பு தலைவர் சாலமோன், மாநகர செயலாளர் அருள் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்