எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில் 562 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளியில் 562 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

Update: 2020-02-15 22:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முருகேசன் வரவேற்றார். விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு 562 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், மாணவர்களின் நலன்கருதி புத்தகம், சீருடை, மடிக்கணினி உள்பட 14 வகையான பொருட்களை அரசு இலவசமாக வழங்குகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 96 ஆயிரத்து 788 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 128 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 170 மாணவர்களுக்கும், 18 ஆயிரத்து 141 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 14 ஆயிரத்து 771 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும். மேலும் மாணவர்கள் தரமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக, பட்ஜெட்டில் ரூ.34 ஆயிரத்து 841 கோடி கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்று சாதிக்க வேண்டும், என்றார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், துணைத்தலைவர் ராஜன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அறங்காவலர் தேர்வுக்குழு தலைவர் பிரேம்குமார், ஆவின் முன்னாள் தலைவர் திவான்பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்