மாமூல் தராததால் தாக்கினார்: உதவி சப்-இன்ஸ்பெக்டர் மீது முதியவர் புகார்

மாமூல் தராததால் முதியவரை தாக்கியதாக போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

Update: 2020-02-14 23:42 GMT
புதுச்சேரி,

புதுவை தருமாபுரி இந்திராநகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 61). இவர் மேட்டுப்பாளையம் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் ஜனார்த்தனன் மேட்டுப்பாளையம், வழுதாவூர் சாலை 4முனை சந்திப்பில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக இருக்கும் நான் இரவில் அந்த கடையின் வாசலில் படுத்து தூங்குவேன்.

கடந்த மாதம் 29-ந்தேதி இரவு நான் தூங்கிக்கொண்டிருந்தபோது யாரோ என்னை உதைத்து சட்டையை பிடித்து தூக்கினார்கள். என்னை திட்டி தள்ளினார்கள்.

நான் எழுந்து பார்த்தபோது என் எதிரில் மேட்டுப்பாளையம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சாதாரண உடையில் நின்றிருந்தார். அவருடன் 8 பேர் நின்று கொண்டிருந்தனர்.

எனக்கு மிரட்டல் விடுத்த அவர் என்னை தாக்கினார். ஏற்கனவே நோய்வாய்பட்ட நான் வலிதாங்காமல் என்னை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். மீண்டும் என்னைமிரட்டிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

கடந்த பொங்கலின்போது நாங்கள் கரும்பு விற்பனை செய்தோம். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மாமூல் கேட்டுவந்தார். ஆனால் கரும்பு விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து மாமூல் தர வில்லை.

அப்போதுமுதல் என் மீது ஆத்திரம் கொண்டதான் காரணமாகவே என்னை தாக்கி மிரட்டி காயப்படுத்தியுள்ளார். இதனால் மாமூல் தரமுடியாத வியாபாரிகளும் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராதாகிருஷ்னன் கூறியுள்ளார்.

இதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்