அடகு வைத்த பத்திரத்தை திருப்பி தர விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் கைது - பண்ருட்டியில் பரபரப்பு
அடகு வைத்த பத்திரத்தை திருப்பி தருவதற்கு விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பண்ருட்டி கூட்டுறவு சங்க செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லேன் 6-வது தெருவில் பண்ருட்டி வட்ட வீட்டுவசதி சங்கம் உள் ளது. இந்த சங்கத்தில் புலியூர் காட்டுசாகையை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன்(வயது 51) தனது நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் இந்த கடனை அவர் தவணை முறையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டி முடித்தார்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது வீட்டு பத்திரத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு பத்திரத்தை திருப்பி தர வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன் கேட்டதாக தெரிகிறது.
பணத்தை கொண்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறிய ராமச்சந்திரன் இது குறித்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். லஞ்சம் கேட்ட கூட்டுறவு சங்க செயலாளரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவுசெய்தனர். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின் பேரில் ராமச்சந்திரன் நேற்று மாலை பண்ருட்டியில் உள்ள வீட்டு வசதி சங்க அலுவலகத்துக்கு சென்றார்.
அவருடன் கடலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜா சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கடம், மாலா மற்றும் போலீசார் சாதாரண உடையில் அங்கே மறைந்து நின்று கொண்டிருந்தனர்.
பின்னர் ராமச்சந்திரன் ரூ.10 ஆயிரம் பணத்தை கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரனிடம் கொடுத்தார். அதை வாங்கியபோது அங்கே மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் பாஸ்கரனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாஸ்கரன் கடலூர் கூத்தப்பாக்கம் சண்முக சுந்தரம்பிள்ளை நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் இது போன்று வேறு யாரிடமும் லஞ்சம் வாங்கி இருக்கிறாரா? வேறு ஏதேனும் புகார் உள்ளதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அடகு வைத்த பத்திரத்தை திருப்பி தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.