சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி காயம்
திருப்பூரில் வீட்டில் சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தம்பதி காயமடைந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மங்கலம் ரோடு கருவம்பாளையம் தொடக்கப்பள்ளி வீதியில் ஒரு வீட்டின் முதல்மாடியில் சிவசண்முகம்(வயது 55) மற்றும் அவருடைய மனைவி சாந்தாமணி(49) ஆகியோர் குடியிருந்து வருகிறார்கள்.
மாடியின் ஒரு பகுதியில் ஓலை கொட்டகையில் நேற்று இரவு 7.30 மணியளவில் கியாஸ் அடுப்பில் சாந்தாமணி சமையல் செய்துள்ளார்.. அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதை கவனித்த சாந்தாமணி சிலிண்டர் மீது தண்ணீர் ஊற்றினார். கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. வீட்டில் இருந்த சிவசண்முகம், சாந்தாமணி ஆகியோருக்கு முதுகு மற்றும் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. இதில் ஓலை கொட்டகை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தினார்கள். காயமடைந்த கணவன்-மனைவி இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.