ஈரோட்டில் அண்ணன்-தங்கை மீது தாக்குதல்: 5 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
ஈரோட்டில் அண்ணன்-தங்கை மீது தாக்குதல் நடத்திய 5 மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார். அந்த மாணவிக்கு அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிளஸ்-2 மாணவர் ஒருவர் காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதை அந்த மாணவி அவரது அண்ணனிடம் கூறியுள்ளார். அவர், அந்த மாணவரை அழைத்து கண்டித்துள்ளார்.
இந்தநிலையில் சிறுமியும், அவரது அண்ணனும் கொல்லம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் நடந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த அந்த மாணவர், மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதை மாணவியின் அண்ணன் தட்டி கேட்டார். இதைத்தொடர்ந்து அவரை மாணவர் தாக்க முயன்றார்.
அப்போது உடனிருந்து மாணவரின் வகுப்பு தோழர்களான 5 பேரும், உறவினரான ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோடு பகுதியை சேர்ந்த தொழிலாளியான ரவி (வயது 20) என்பவரும் சேர்ந்து மாணவியின் அண்ணனை தாக்கினார்கள். இதை தடுக்க முயன்ற மாணவிக்கும் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
காயம் அடைந்த மாணவியையும், அவரது அண்ணனையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணன்-தங்கையை தாக்கியதாக பிளஸ்-2 மாணவர்கள் 5 பேரையும், ரவியையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 17 வயதுடைய 5 மாணவர்களை கோவையில் உள்ள சிறார் சீர்திருத்த குழுமத்திலும், ரவியை கோவை மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.