வைகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, 5 மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களையும் சேர்த்து, வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
அதுமட்டுமல்லாமல், வக்கீல் கமிஷனர்கள் குழுவை அமைத்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கோச்சடையில் இருந்து விரகனூர் வரை வைகை ஆற்றில் எத்தனை இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வக்கீல்கள் வீராகதிரவன், திருநாவுக்கரசு உள்ளிட்டோரை நியமித்தது. இந்த குழுவினர் உரிய இடங்களில் ஆய்வு செய்து, வைகை ஆற்றில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
மதுரையில் வண்டியூர், தென்கால், உலகனேரி ஆகிய கண்மாய்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் இயல்பான அளவையும், தற்போது அங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளனவா என்றும் வைகை ஆற்றின் தொடக்கத்தில் இருந்து, கடலில் கலக்கும் வரை உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 5 மாவட்ட வருவாய் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல கிருதுமால் நதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் விருதுநகர் கலெக்டரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
விசாரணை முடிவில், வைகை ஆற்றின் தொடக்கத்தில் இருந்து கடலில் கலக்கும் வரை உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க 5 மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் இடம் பெற வேண்டும். அவர்கள் கழிவுநீர் கலப்பதை தடுப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கிருதுமால் நதியின் கரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.