மாநில பிரச்சினைகளுக்கு ரங்கசாமியின் தவறான ஆட்சியே காரணம் அமைச்சர் நமச்சிவாயம் பதிலடி

புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் ரங்கசாமியின் தவறான ஆட்சி தான் காரணம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2020-02-10 23:44 GMT
புதுச்சேரி,

புதுவை பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில தினங்களுக்கு முன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் கட்சியின் நிறுவன தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி அரசைப்பற்றியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியை பற்றியும் குறைகூறி பேசி உள்ளார்.

ரங்கசாமி ஆட்சிக்காலத்தில் நிர்வாகத்தை சரியாக நடத்தாமல் இருந்ததுதான் புதுவையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக உள்ளது. அதை மறந்துவிட்டு நாங்கள் ஏதோ மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதுபோல அவர் பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

எங்கள் அரசுக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தாலும், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு தேவையான நிதியை தராவிட்டாலும், புதுவையை மத்திய நிதிக்கமிஷனில் சேர்க்க மறுத்தபோதிலும் மக்கள்நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கான இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவில்லை. கவர்னர் தினமும் நிர்வாகத்தில் தலையிடுகிறார். நிர்வாகம் சரிவர செயல்பட துணையாக இருப்பதில்லை. இருந்தபோதிலும் இக்கட்டான சூழ்நிலையில் நல்ல நிர்வாகத்தை நடத்தி மத்திய அரசிடம் இருந்து சிறந்த நிர்வாகத்துக்கான விருதுகளை பெற்றுள்ளோம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதால் மத்திய அரசு ரூ.80 கோடியை கூடுதலாக ஒதுக்கி உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு புதுவை மாநில நிர்வாகம் சிறப்பாக நடந்து வருகிறது. மக்கள் அதை உணர்ந்து நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர் இடைத்தேர்தலிலும், எம்.பி. தேர்தலிலும் மகத்தான வெற்றியை தந்தனர். இது புதுவை அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

இப்படியிருக்க எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி நிர்வாக திறமை இல்லாத அரசு என்று பேசுவது கண்டனத்திற்குரியது. வருகிற 2021 தேர்தலிலும் எங்கள் கூட்டணிதான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

முதலில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மக்கள் அவருக்கு இட்ட பணியை ஆற்றவேண்டும். மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டுவரும்போதும், கவர்னர் புதுவை மக்களுக்கு எதிராக கருத்துகளை சொல்லும்போதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதித்தவர்தான் ரங்கசாமி.

முதலில் மக்கள் கொடுத்த ஜனநாயக கடமையை அவர் ஆற்றவேண்டும். அதை விடுத்து பழிசொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகளை பேசவும், ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும்தான் சட்டமன்றம். அங்கு எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் பிரச்சினைகளை சரிசெய்ய அரசு தயாராக உள்ளது. சட்டமன்றத்துக்கு வந்து விவாதிக்காமல் 4 ஆண்டுகள் கழித்து ரங்கசாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசியலில் ஆளுங்கட்சி என்றாலும், கூட்டணி கட்சி என்றாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ரங்கசாமி ஆட்சியில் அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அரசு அலுவலகங்களை பூட்டி போராட்டங்கள் நடத்தினார்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியை குறைகூறி உள்ளார். எங்கள் கட்சி சார்பில் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு தனவேலு எம்.எல்.ஏ. விளக்கம் கொடுத்துள்ளார். அவரது விளக்கத்தை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி உள்ளோம். கேசினோ, லாட்டரி பற்றியெல்லாம் ரங்கசாமி பேசியுள்ளார். நாங்கள் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் புதுவை மக்களுக்கு பாதிப்பில்லாத திட்டங்களைத்தான் கொண்டுவருவோம். புதுவை மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் செயல்படுத்தமாட்டோம்.

ரங்கசாமி ஆட்சியின்போது அரசு சார்பு நிறுவனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை பணியமர்த்தியதுதான் இன்றைக்கு சம்பளம் போட முடியாததற்கு காரணம். அவர் ஆட்சியில் இருந்தபோது வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டுமே கட்டினார். ஆனால் நாங்கள் அவர் வாங்கிய கடன்தொகையையும் திருப்பி செலுத்தி வருகிறோம்.

அரசு சார்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோல் பங்க், மதுபார் போன்றவை நஷ்டத்தில் இயங்க அவரது தவறான நிர்வாகம்தான் காரணம். அவர் எங்களைப்பற்றி குறைகூறி உள்ளார். நாங்கள் தனியார் யாருக்காவது அந்த மதுபார், பெட்ரோல் பங்க்கை கொடுத்துள்ளோம் என்று அவரால் நிரூபிக்க முடியுமா? இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்