டெல்லியில் இருக்கும் சிலர் விரும்பாததால், ‘வருமானவரித்துறை மூலம் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்’ - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி
டெல்லியில் இருக்கும் சிலர் விரும்பாததால் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டம், மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசியகுடிமக்கள் பதிவேடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் கூட்டமைப்பு தலைவர் அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது. அனைத்து ஜமாத்துகள், இத்திஹாதுல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ராஜபாளையம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.,மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.
முடிவில் ஹஸனுதீன் பைஜி நன்றி கூறினார்.
இதனையடுத்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது துணிச்சலான நடவடிக்கை. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கின்றது. மக்களுக்காகத்தான் சட்டம் மக்கள் சட்டங்களை விரும்பாத போது அந்த சட்டங்களை திரும்பப் பெறுவது தான் ஜனநாயகத்தின் நேர்மையான அணுகுமுறையாக இருக்க முடியும். அந்த வகையில் அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வரக்கூடிய அனைவரையுமே பாகுபாடு இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர்களையும் இணைப்போம் என்ற சரத்துகளை இந்திய அரசு மற்றொரு முறை திருத்தி அங்கீகரிக்க வேண்டும். என்.பி.ஆர். சட்டங்களை பொறுத்தவரை அது காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய வடிவில் இருந்து மாறுபட்டு புதிய வடிவில் அது முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஆபத்தான பல அம்சங்களும் இருக்கிற காரணத்தினால் இந்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். என்.ஆர்.சி. சட்டத்தால் அசாமில் 19 லட்சம் மக்கள் குடியுரிமை இழந்திருக்கிறார்கள். அதில் 12 லட்சம் மக்கள் இந்து சமுதாயத்தினர். இந்த நிலையில்தான் அசாமை அலங்கோலமாக்கிய என்.ஆர்.சி. சட்டத்தை நாடு முழுக்க விரிவு படுத்தகூடாது என்று மக்கள் எதிர்த்தார்கள். மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
நடிகர் விஜய்யை டெல்லியில் இருக்கக்கூடிய ஒரு சிலர் விரும்பாத காரணத்தினால் அவருக்கு வருமானவரித்துறையின் மூலமாக நெருக்கடி கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றார்போல நடிகர் ரஜினிகாந்த் செயல்படுவதால் அவரை பாதுகாக்கிறார்கள். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த நிதானத்தோடு பொறுப்புணர்வோடு பேச வேண்டும். இவற்றை மறந்து விட்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்த கருத்துகள் கடும் கண்டனங்களை உருவாக்கி இருக்கிறது. அவரை கட்சி தலைமை கண்டித்து திருத்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.