தறிகெட்டு ஓடிய வேன் கவிழ்ந்து ஊழியர் பலி 5 பேர் படுகாயம்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் வேன் கவிழ்ந்ததில் தனியார் கம்பெனி ஊழியர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-02-10 22:15 GMT
சென்னை,

கரூர் மாவட்டம் தாந்தோணி மலையை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் தாமோதரன் (வயது 26). இவர், ஸ்ரீபெரும்புதூரில் தங்கி, அங்குள்ள அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை தாமோதரன் வழக்கம்போல கம்பெனி வேனில் ஊழியர்களுடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த ஊழியர்கள் அய்யோ, அம்மா என்று கூச்சலிட்டனர்.

ஊழியர் பலி

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தாமோதரன், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் 5 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்