ஏழை பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தகுதிவாய்ந்த ஏழை பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கவேண்டும் என்று சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

Update: 2020-02-10 22:30 GMT
புதுச்சேரி,

சிவா எம்.எல்.ஏ., தனது தொகுதி மக்களுடன் சென்று கலெக்டர் அருணை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சாலையோரம் வசிக்கும் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு கொண்டுவந்தது. அந்த திட்டத்தின்படி புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் தொகுப்பு வீடுகள் வழங்க கணக்கெடுக்கும் பணி பலமுறை நடைபெற்றது.

அதில் எனது தொகுதியில் சாலையோரம் வசிக்கும் உண்மையான ஏழை பயனாளிகள் பட்டியல் அதிகாரிகளால் கணக்கெடுக்கப்பட்டு 3 முறை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் முதல்-அமைச்சர் அந்த பட்டியலை எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் இறுதியாக முடிவு செய்தார்.

ஆனால் அந்த பட்டியலில் இடம்பெற்ற எனது தொகுதியை சேர்ந்த பயனாளிகளிடம் வீடுகள் ஒதுக்கீடு சம்பந்தமாக அதிகாரிகள் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை. இதனிடையே வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே தேர்வு பெற்ற எனது தொகுதியை சேர்ந்த பயனாளிகள் என்னிடம் வந்து வீடு கிடைக்குமா? என கேள்வி எழுப்புகிறார்கள்.

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆகவே இதுகுறித்து தாங்கள் முழுமையாக ஆய்வு செய்து முதல்-அமைச்சர் முன்னிலையில் எடுக்கப்பட்ட பட்டியலின்படி யாரும் விடுபடாமல் தகுதிவாய்ந்த ஏழை பயனாளிகள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்