“உழைக்கும் பெண்கள் உடல்நலத்திலும் அக்கறை காட்டவேண்டும்” டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

“உழைக்கும் பெண்கள் உடல்நலத்திலும் அக்கறை காட்டவேண்டும்” என்றும், “கரன்சியை விட ‘கலோரி’ எண்ணுவதில் கவனமாக இருக்கவேண்டும்” என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2020-02-08 23:30 GMT
சென்னை,

உழைக்கும் மகளிர் சங்கம் சார்பில் சங்கத்தின் நிறுவனரும், சமூக சேவகியுமான மறைந்த ஜெயா அருணாசலம் 88-வது பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் நந்தினி ஆசாத் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பாரதிய வித்யா பவன் தலைவர் ‘இந்து’ என்.ரவி, ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி, மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில் தென்னிந்தியாவில் சிறந்த மகளிர் கூட்டுறவு அமைப்புகளுக்கு தெலுங் கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விருதுகள் வழங்கி கவுரவித்தார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

உழைக்கும் பெண்களின் சக்தி

உழைக்கும் மகளிர் என்றுமே பவுர்ணமி போல பிரகாசிக்கக் கூடியவர்கள், ஜொலிக்கக்கூடியவர்கள். பிரச்சினைகளில் துவண்டு விடாமல் வைராக்கியத்துடன் உழைக்கும் பெண்களின் சக்தி மிகப்பெரியது. பெண்ணின் கையில் பணம் இருந்தால் தான் அக்குடும்பமே நன்றாக இருக்கும். பெண்கள் கையில் பொருளாதாரம் இருந்தால் நாடே முன்னேறும்.

ஒரு ஆணின் கையில் ரூ.100 இருந்தால் அது டாஸ்மாக் கடைக்கும், வீணான பொருளுக்குமே செலவிடப்படும். ஆனால் ஒரு பெண்ணின் கையில் ரூ.100 இருந்தால் அது அக்குடும்ப நலனுக்காகவே செலவிடப்படும். அதற்காக நான் ஆண்களை தவறாக பேசுவதாக அர்த்தம் கிடையாது. அதிகாரம் மட்டுமல்ல குடும்பத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பெண்ணின் கையில் இருப்பதே நலம், அதுவே நாட்டுக்கு பலம். கடவுளிடம் வேண்டினாலும் கணவன்-பிள்ளைகளுக்காக மட்டுமே வேண்டிக்கொள்ளும் குணம் பெண்களுடையது. இது தியாகமாக ஏற்கமுடியாது.

அன்பே மிகப்பெரிய ஆயுதம்

எனவே பெண்களும் உங்களது உடல்நிலையில் அக்கறை கொள்ளவேண்டும். கரன்சி எண்ணுவதில் உள்ள ஆர்வம், கவனம் கலோரி எண்ணுவதிலும் இருக்கவேண்டும். சரியான எடை இருந்தால் மட்டுமே பெண்கள் உறுதியான நடைபோட முடியும்.

எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் தியாகங்கள், சோகங்கள் உள்ளன. உறுதிபடைத்த பெண்களால் தான் இன்று நாடு உயர்வுடன் திகழ்கிறது. பெண்களிடம் உள்ள மிகப்பெரிய ஆயுதமே அன்புதான். எனவே எதற்காகவும் நிம்மதியை தொலைக்காதீர்கள். பிரச்சினைகளை உதறி தள்ளுங்கள். சவால்களை துணிச்சலாக எதிர்கொள்வது தான் எனது வெற்றி. அதனால் தான் இந்த நிலையை நான் அடைந்திருக்கிறேன். எனவே பெண்கள் அனைவரும் பிரச்சினைகளை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். அதேவேளை உடல்நல பரிசோதனைகளையும் முறையாக மேற்கொண்டு ஆரோக்கியத்தையும் பேணி காத்திடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்