பெலகாவி அருகே கோர விபத்து மேம்பாலத்தில் இருந்து கீழே டிராக்டர் விழுந்தது தொழிலாளர்கள் 6 பேர் சாவு 17 பேர் படுகாயம்

பெலகாவி அருகே மேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது. இதில் பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் பலியானார்கள்.

Update: 2020-02-08 23:00 GMT
பெங்களூரு,

பெலகாவி மாவட்டம் கானாப்பூர் தாலுகா நந்தகாட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடகி கிராமத்தில் ஒரு மேம்பாலம் உள்ளது.

6 பேர் சாவு

இந்த மேம்பாலத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் ஒரு டிராக்டர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த டிராக்டரில் பெண்கள் உள்பட 23 பேர் இருந்தனர். இந்த நிலையில், மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் மேம்பால தடுப்பு சுவரை இடித்து தள்ளிவிட்டு 30 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனால் டிராக்டருக்கு அடியில் சிக்கி தொழிலாளர்கள் உயிருக்கு போராடினார்கள்.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நந்தகாட் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிய 19 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே 2 பேர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

கரும்பு அறுவடைக்கு...

படுகாயம் அடைந்த மற்ற 17 பேரும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. போலீஸ் விசாரணையில், போகூர் மற்றும் இடகி கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்களை கரும்பு அறுவடை செய்வதற்காக டிராக்டரில் அழைத்து சென்றுள்ளனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிராக்டர் மேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தது தெரிய வந்துள்ளது. டிராக்டரில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தவர்கள் மீது, அதே டிராக்டர் விழுந்ததால் 6 பேர் பலியானதுடன், 17 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த விபத்தில் போகூர் கிராமத்தை சேர்ந்த சாந்தவ்வா அலகன்டி, குலாபி உனசிஹட்டி, நாகவ்வா மாத்தோலா, சங்கவ்வா உனசிஹட்டி, சாந்தவ்வா ஜின்சூகி மற்றும் அசோக் கேதானி ஆகிய 6 பேர் பலியானதும், இவர்களில் அசோக் கேதானி தவிர மற்ற 5 பேரும் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. டிராக்டரை டிரைவர் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கலெக்டர் ஆறுதல்

இதற்கிடையே விபத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பெலகாவி மாவட்ட கலெக்டர் பொம்மனஹள்ளி நேரில் சென்று பார்த்தார். அப்போது காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட கலெக்டர் பொம்மனஹள்ளி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து நந்தகாட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான 6 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், போகூர் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

மேலும் செய்திகள்