நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 2,008 வழக்குகளுக்கு தீர்வு
நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,008 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,008 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
சென்னை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முதலாவது தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று காலை தொடங்கியது. நெல்லையில் மொத்தம் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார்.
1–வது அமர்வில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, ஓய்வு பெற்ற அரசு மருத்துவரும், மக்கள் நீதிமன்ற உறுப்பினருமான பூவலிங்கம், 2–வது அமர்வில் குடும்ப நல மாவட்ட நீதிபதி சந்திரா, முதன்மை சார்பு நீதிபதி குமரேசன், 3–வது அமர்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகாந்த், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, 4–வது அமர்வில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்திராணி, மோட்டார் வாகன சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மதி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
5–வது அமர்வில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும், மக்கள் நீதிமன்ற உறுப்பினருமான முருகையா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கெங்கராஜ், 6–வது அமர்வில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்–1 நீதிபதி பாபு, 7–வது அமர்வில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்–2 நீதிபதி கடற்கரை செல்வம், 8–வது அமர்வில் நீதிமன்ற நடுவர் நீதிமன்றம் எண்–3 நீதிபதி பழனி, 9–வது அமர்வில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்–4 நீதிபதி ஜெயகணேஷ் ஆகியோர் முன்னிலையில் சமரச தீர்வு நடந்தது.
18 அமர்வுகள்
மேலும் தென்காசி, அம்பை, சங்கரன்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, செங்கோட்டை, சேரன்மாதேவி, சிவகிரி மற்றும் ஆலங்குளம் ஆகிய 9 தாலுகாவில் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 18 அமர்வுகள் அமைக்கப்பட்டு இருந்தது.
மேற்கண்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் போன்ற வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
2,008 வழக்குகளுக்கு தீர்வு
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 6,361 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில் 1,937 வழக்குகள் முடிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 71 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் 2,008 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. மேற்கண்ட வழக்குகளில் மொத்தம் ரூ.9 கோடியே 61 லட்சத்து 77 ஆயிரத்து 807 இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். முடிவுற்ற வழக்கின் தீர்ப்பு நகலை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான வஷீத்குமார் செய்து இருந்தார்.