சேதமாகி காணப்படும் பள்ளி கட்டிடம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதாகுப்பம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சதாகுப்பம், வாழவச்சனூர், அந்தோணியார்புரம், அகரம்பள்ளிபட்டு, காட்டுக்கொட்டாய் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

Update: 2020-02-08 21:30 GMT
வாணாபுரம், 

4ம் வகுப்பு செயல்பட்டு வரும் கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதம் ஏற்பட்டு அவ்வப்போது சுவற்றில் உள்ள சிமெண்ட் பூச்சிகள் இடிந்து கீழே விழுந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவர்கள் வகுப்பில் இல்லாத பொழுது சிமெண்ட் பூச்சிகள் உடைந்து கீழே விழுந்து உள்ளது. மாணவர்கள் வெளிப்புறங்களில் இருந்ததால் விபத்து ஏற்படவில்லை. நேற்றும் அவ்வப்போது சுவரில் உள்ள சிமெண்டு பூச்சுகள் இடிந்து கீழே விழுந்தது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கீழே விழுந்து சிமெண்டு பூச்சுகளை அப்புறப்படுத்தினர்.

சேதமாகி பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பள்ளி கட்டிடத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அகற்ற வேண்டும் என்றும், புதியதாக பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தனர். இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே தற்போது செயல்பட்டு வரும் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான கட்டிடங்கள் முழுவதும் சேதம் ஏற்பட்டும் கதவுகள் உடைந்தும் காணப்படுவதால் அன்றாடம் மாணவமாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்