கே.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் வீரர்கள் உள்பட 16 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கே.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் தொடர்பாக வீரர்கள் உள்பட 16 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2020-02-07 22:00 GMT
பெங்களூரு, 

கர்நாடக பிரிமியர் லீக் (கே.பி.எல்) கிரிக்கெட் போட்டி கர்நாடகத்தில் ஆண்டுேதாறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளின்போது சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் கே.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்தது தொடர்பாக பெங்களூரு கப்பன்பார்க், பாரதிநகர், ஜே.பி.நகர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இந்த வழக்குகள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் முஸ்தாக் அலி, பல்லாரி டஸ்கர் அணியின் உரிமையாளர் அரவிந்த், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர் சுதீந்திர சிண்டே, கிரிக்கெட் வீரர்கள் கவுதம், அப்ராகர் காசி, விஸ்வநாத், சேக்வாத், பயிற்சியாளர் வினுபிரசாத், சூதாட்டதரகர்களான அமீத் மாவி, பாப்னா, சாய்யம், ஜாடின், ஹரீஷ், மண்டி, வெங்கி, கிரண் ஆகிய 16 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த நிலையில், கே.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் தொடர்பாக பெலகாவி, பல்லாரி அணிகளின் உரிமையாளர்கள், கிரிக்கெட் வீரா்கள், சூதாட்டதரகர்கள் என 16 பேர் மீதும் பெங்களூரு கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் 16 பேரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

குறிப்பாக செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றை கோர்ட்டில் போலீசார் சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் கைதான 16 பேரும் தற்போது ஜாமீனில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்