திருச்சி பா.ஜனதா பிரமுகர் கொலை: கைதான மிட்டாய் பாபுவிடம் போலீஸ் காவலில் விசாரணை
திருச்சி பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் கைதான மிட்டாய் பாபுவிடம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி,
திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு (வயது 39). இவர், பாரதீய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல செயலாளராக பதவி வகித்தார்.இவர், கடந்த மாதம் 27-ந் தேதியன்று அதிகாலை 5.30 மணியளவில் காந்தி மார்க்கெட் 6-வது கேட் அருகில், வரகனேரியை சேர்ந்த பிரபல ரவுடி முகமது பாபு என்ற மிட்டாய் பாபு(21) மற்றும் அவரது கூட்டாளிகள் சச்சின், யூசுப்கான், சுடர்வேந்தன், ஹரிபிரசாத் ஆகியோரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக விஜயரகு செயல்பட்டதால் அவர்் கொலை செய்யப்பட்டதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டமும் நடத்தினர்.
இதற்கிடையே, விஜயரகு கொலை செய்யப்பட்டது முன்விரோதம் காரணமாகத்தான் என்றும், மதரீதியான கொலை அல்ல என்றும் மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ விளக்கம் அளித்திருந்தார். விஜயரகு கொலை குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிட்டாய் பாபு உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மிட்டாய் பாபுவை, காந்தி மார்க்கெட் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்திருந்தனர். அதன்படி, அவரை வருகிற 9-ந் தேதிவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மிட்டாய் பாபுவை காந்தி மார்க்கெட் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் மிட்டாய்பாபு போலீசாரிடம் தெரிவித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, கொலையுண்ட விஜயரகுவின் மகளை மிட்டாய்பாபு ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், ஏற்கனவே விஜயரகுவுக்கும், தனக்கும் முன்விரோதம் இருந்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஏற்கனவே சிறையில் இருந்து பரோலில் வந்த மிட்டாய்பாபு, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததாக கூறி உள்ளார். போலீசார் அவரிடம், பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றை பதிவு செய்துள்ளனர். கொலை செய்தது எப்படி, அதற்கு உடந்தையாக இருந்த நபர்களை வரவழைத்து சென்றது எப்படி? என்றும் கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கும் மிட்டாய்பாபுவை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி அவற்றை வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.