மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையத்தில் குவியல், குவியலாக தேங்கி கிடக்கும் நெல் - விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையத்தில் குவியல், குவியலாக நெல் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குத்தாலம்,
மயிலாடுதுறை அருகே செருதியூர் ஊராட்சி முளப்பாக்கம் அய்யனார் கோவில் திடலில் திறந்தவெளியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் கணினியை செயல் படுத்த முடியாமல் கடந்த 2 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளது.
இந்த நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையம் அருகே திறந்தவெளியில் அடுக்கியும், குவியல், குவியலாக குவித்தும் வைத்துள்ளனர். இதனால் திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து விடுமோ? என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் விவசாயிகள் கொள்முதல் நிலையம் அருகே திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தங்களது நெல் மூட்டைகளை தார்பாய், டிஜிட்டல் பேனர்களை கொண்டு மூடி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-
தற்போது நெல் அறுவடை உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதால், விவசாயிகள் அதிக அளவில் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 4-ந் தேதி தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கணியை இயக்க முடியாமல் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிலர் நெல்லை குவியல், குவியலாக குவித்தும் வைத்துள்ளனர். எனவே திடீரென மழை பெய்தால் நெல் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது. மழையில் நனைந்து ஈரப்பதமானால் அந்த நெல்லை திரும்ப எடுத்து சென்று வெயிலில் காய வைத்த பின்னர் தான் விற்க முடியும் என்ற அவலநிலை உள்ளது. கணினி மூலம் நெல்லை கொள்முதல் செய்து, விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் முறை விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும், தொழில் நுட்ப கோளாறு ஏற்படும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல் மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் உள்ள பல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொழில் நுட்ப கோளாறினால் கணினியை இயக்க முடியாமல் நெல் கொள்முதல் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் குவியல், குவியலாக தேங்கி கிடக்கிது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நெல் கொள்முதல் நிலையங்களில் தொழில் நுட்ப கோளாறை சரி செய்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.