திருக்குறுங்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருக்குறுங்குடியில் நேற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
ஏர்வாடி,
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வட்டாரத்தில் பருவமழை போதிய அளவு பெய்ததால், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை நடந்து வருகிறது.
அம்பை-16, அதிசய பொன்னி, ஆந்திரா பொன்னி போன்றவை அதிகளவில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விவசாயிகள் நலன்கருதி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று நேற்று திருக்குறுங்குடி அன்னதான சத்திரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இங்கு 100 கிலோ பெரிய ரக நெல் ரூ.1,865-க்கும், சிறிய ரக நெல் ரூ.1,905-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையத்துக்கு வரும் விவசாயிகள் பட்டா அடங்கல் நகல், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும், அவர்களது வங்கி கணக்கில் 3 நாட்களில் நெல்லுக்கு உரிய தொகை செலுத்தப்படும் என நெல் கொள்முதல் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.