வங்கியில் காசோலையை திருடி திருத்தம் செய்து ரூ.9.87 லட்சம் அபேஸ் செய்த 2 பேருக்கு வலைவீச்சு

வங்கியில் காசோலையை திருடி திருத்தம் செய்து ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2020-02-06 23:52 GMT
மும்பை, 

மும்பை மலாடை சேர்ந்தவர் பாவின். இவர் கடந்த வாரம் மலாடு எஸ்.வி. ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையை அங்குள்ள பெட்டியில் போட்டு விட்டு சென்றார். இதன் பின்னர் சில நாள் கழித்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாவின் வங்கிக்கு சென்று, இதுபற்றி விசாரித்தார்.

ரூ.9.87 லட்சம் அபேஸ்

அப்போது, ரூ.5 ஆயிரத்துக்கான அவரது காசோலையில் பெயர் மாற்றப்பட்டு, ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் என திருத்தி எழுதப்பட்டு மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால் பாவின் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் காசோலை போடும் பெட்டியில் இருந்து 2 ஆசாமிகள் காசோலையை திருடி அதனை திருத்தி பெயர் மாற்றம் செய்து பணமோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காசோலையை திருடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்