புதிய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு

கர்நாடக மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 10 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

Update: 2020-02-06 23:41 GMT
புதிய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு பின்வருமாறு:-

1. எஸ்.டி.சோமசேகர்

புதிதாக மந்திரி பதவி ஏற்றுள்ள எஸ்.டி.சோமசேகர் பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் இருந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். கட்சி மாறும் வரை காங்கிரசில் சித்தராமையாவின் ஆதரவாளராக செயல்பட்டார். 62 வயதாகும் அவர் கூட்டணி ஆட்சியில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த அவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். முதல் முறையாக அவர் மந்திரி பதவியை அலங்கரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ரமேஷ் ஜார்கிகோளி

புதிய மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, சித்தராமையா ஆட்சியிலும், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் மந்திரியாக செயல்பட்டவர். கோகாக் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்த்ததில் மிக முக்கிய பங்காற்றியவர். சட்டசபைக்கு 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு 59 வயதாகிறது. பெலகாவியில் அவருக்கு சொந்தமாக சர்க்கரை ஆலைகள் உள்ளன. கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவர் வால்மீகி (எஸ்.டி.) சமூகத்தை சேர்ந்தவர்.

3. கே.சுதாகர்

புதிய மந்திரி கே.சுதாகர், அடிப்படையில் எம்.பி.பி.எஸ். முடித்த டாக்டர் ஆவார். சிக்பள்ளாப்பூர் தொகுதியில் இருந்து 3-வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் காங்கிரசில் இருந்தபோது சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். குமாரசாமி ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டு சிறிது காலம் பணியாற்றினார். 46 வயதாகும் அவர் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர்.

4. சிவராம் ஹெப்பார்

புதிய மந்திரி சிவராம் ஹெப்பார் கர்நாடக சட்டசபைக்கு எல்லாப்பூர் தொகுதியில் இருந்து 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 62 வயதாகும் அவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். பிராமணர் வகுப்பை சேர்ந்த அவர், தனது தொகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

5. ஸ்ரீமந்த் பட்டீல்

புதிய மந்திரி ஸ்ரீமந்த் பட்டீல் காக்வாட் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவருக்கு சொந்தமாக பெலகாவி மாவட்டத்தில் பல்வேறு சர்க்கரை ஆலைகள் உள்ளன. மற்றவர்களை போல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாமலேயே, ஓட்டலில் இருந்து யாருக்கும் தெரியாமல் மும்பை சென்று ஆஸ்பத்திரியில் சேர்ந்தவர். ஆயினும் அவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 64 வயதாகும் அவர் மராட்டா ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர். வேளாண்மை பிரிவில் பட்டப்படிப்ைப முடித்துள்ளார்.

6. பி.சி.பட்டீல்

புதிய மந்திரி பி.சி.பட்டீல் போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். அதன் பிறகு அவர் கன்னட திரைத்துறையில் பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இரேகெரூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 64 வயதாகும் அவர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். அவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார். எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ உரையாடலை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. ஆனந்த்சிங்

புதிய மந்திரி ஆனந்த்சிங், பல்லாரி மாவட்டம் விஜயநகர் தொகுதியில் இருந்து 4-வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எடியூரப்பா முதல் முறையாக முதல்-மந்திரியாக இருந்தபோது சுற்றுலாத்துறை மந்திரியாக பணியாற்றியவர். ரெட்டி சகோதரர்களுடன் நெருக்கமாக இருந்தவர். குமாரசாமி ஆட்சியில் முதல் ஆளாக வந்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். 53 வயதாகும் அவர் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர். பி.யூ.சி. வரை படித்துள்ளார்.

8. கே.கோபாலய்யா

புதிய மந்திரி கே.கோபாலய்யா மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது தொகுதியில் உள்ள விருசபாவதி வார்டு கவுன்சிலராக பணியாற்றிய அவர், பிறகு ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். அவர் தொடர்ச்சியாக 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த அவர், பட்டப்படிப்பு முடித்துள்ளார். அவருக்கு 59 வயதாகிறது.

9. நாராயணகவுடா

புதிய மந்திரி நாராயணகவுடா, கே.ஆர்.பேட்டை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் தொழில் அதிபரான அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். 56 வயதாகும் அவர் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். ஓட்டல் நிர்வாகத்தில் டிப்ளமோ முடித்துள்ளார்.

10. பைரதி பசவராஜ்

புதிய மந்திரி பைரதி பசவராஜ், காங்கிரசில் இருந்தபோது சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கே.ஆர்.புரம் தொகுதியில் இருந்து 3-வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், குருபா சமூகத்தை சேர்ந்தவர். 62 வயதாகும் அவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். கர்நாடக சோப்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டு சிறிது காலம் பணியாற்றினார்.

புதிய மந்திரிகள் 10 பேரும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 10 பேரும் வெற்றி பெற்று தற்போது மந்திரியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்