வாலிபர் கொலையில் 5 பேர் சிக்கினர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை

மேட்டுப்பாளையம் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-06 23:00 GMT
மூலக்குளம்,

புதுவை மேட்டுப்பாளையம் ராம்நகர் விரிவாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கராசு மகன் ஜெயபால் (வயது 24). கடந்த 4-ந்தேதி இரவு தனது வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கிய ஜெயபாலை மர்ம கும்பல் தரதரவென இழுத்துச்சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. அதன்பின் மோட்டார் சைக்கிளில் பிணத்தை ஏற்றி சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு கொண்டு சென்று கோரிமேடு தீயணைப்பு நிலைய குடியிருப்பு பகுதியில் வீசிச்சென்றுவிட்டு தலைமறைவானது.

இது குறித்து மேட்டுப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோரிமேடு வடக்கு பாரதி புரத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்தை கடந்த ஆண்டு ஜெயபால் கத்தியால் குத்தினார்.

இதில் உயிர்தப்பிய பன்னீர்செல்வம், முன்விரோதம் காரணமாக தனது ஆதரவாளர்கள் பூபதி, லட்சுமணன், அய்யனார், லோகேஷ் ஆகியோருடன் ஜெயபாலை கொலை செய்தது தெரியவந்தது.

இவர்களை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். இதில் 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கியதாக தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து மேட்டுப்பாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்