ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு
ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க, வைர நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 67). இவர், அரசு வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் இரவு இவர், வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் அண்ணாநகரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.
நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன.
நகை-பணம் திருட்டு
பீரோவை சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த ஒரு பவுன் தங்க நகை, ஒரு வைர மூக்குத்தி, ரூ.3 லட்சம் மற்றும் அரை கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது.
ராஜசேகர் மனைவியுடன் மகள் வீட்டுக்கு சென்றுவிட்டதை அறிந்த மர்மநபர்கள், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்க, வைர நகைகள், பணத்தை திருடிச்சென்று உள்ளனர்.
இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.