ஆதிபராசக்தி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
செய்யாறு அருகே ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பைங்கினர் கிராமத்தில் செய்யாறில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தலைமையிலான தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டு அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது.
இந்த கோவிலில் விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி அமைக்கப்பட்டு பொதுமக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செய்யாறு வழியாக செல்வதால் இக்கோவிலுக்கு சென்று வழிபட்டு செல்கின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்லும் போது நேர்த்திக்கடனாக காணிக்கையை கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலை திறந்து காணிக்கை பணத்தை எண்ணும்போது ரூ.50 ஆயிரத்திற்கு மேலாக வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜையை முடித்து விட்டு பூட்டிச்சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே சென்று முருகர் சிலைக்கு எதிரில் உள்ள உண்டியலின் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடியுள்ளனர். தொடர்ந்து அம்மன் சிலை, விநாயகர் சிலை எதிரில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். பூட்டு உடைக்க முடியாமல் உண்டியலை பெயர்த்தெடுத்து தூக்கி சென்ற மர்ம நபர்கள் அருகிலுள்ள மினிஸ்டேடியம் செல்லும் வழியில் வைத்து பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு காலி உண்டியலை வீசி சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை அந்த வழியாக நடைபயிற்சி சென்ற பொதுமக்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு செய்யாறு போலீசார் விரைந்து சென்று கோவில் மற்றும் அருகிலுள்ள தனியார் கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தினை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.