முன் அறிவிப்பு இல்லாமல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கத்தில் 1¼ மணி நேரம் நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி
முன் அறிவிப்பு இல்லாமல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கத்தில் 1¼ மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
திருச்சி,
குருவாயூர்- சென்னை இடையே தினமும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 2.55 மணிக்கு வந்து சென்னை நோக்கி புறப்பட்டது. அது ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்திற்கு மாலை 3.25 மணிக்கு சென்றது. பின்னர் உடனடியாக அந்த ரெயில் புறப்பட வேண்டும். ஆனால் ரெயில் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ரெயில் புறப்படாதது குறித்து ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர்களிடம் பயணிகள் கேட்டனர். மேலும் ரெயில் நிலையத்தில் அதிகாரிகளிடமும் விசாரித்தனர். அப்போது ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே பிச்சாண்டார் கோவில் பக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், சிறிது நேரம் தாமதமாக ரெயில் புறப்படும் எனவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக முன் கூட்டியே அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லையே என பயணிகள் கேள்வி எழுப்பினர்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைத்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் எனவும், ரெயில் பயணத்தை தவிர்த்து பஸ்சில் பயணம் மேற்கொண்டிருப்போம் எனவும் சில பயணிகள் முறையிட்டனர். இந்த நிலையில் ரெயில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.45 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றது. ரெயிலை நிறுத்தி வைத்து தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இது தொடர்பாக ரெயில்வே வட்டாரத்தில் விசாரித்தபோது, சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக திடீரென ரெயில் நிறுத்தப்பட்டதாகவும், அதனால் முன்கூட்டியே அறிவிப்பு தெரிவிக்க இயலவில்லை, என்றனர். இதுபோன்ற நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.