குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய ரஜினிகாந்த் கருத்து சங்பரிவார் குரலாக ஒலிக்கிறது - திருமாவளவன் பேட்டி
குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய ரஜினிகாந்த் கருத்து சங்பரிவார் குரலாக ஒலிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை,
தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் அறிஞர்கள், பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த வெற்றி தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்தவுடன் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல் பொது நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு ரத்து செய்தது உள்ளது. இதை நான் பாராட்டுகிறேன்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளன. இந்த சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் பா.ஜனதா அரசு முட்டுச் சந்தில் போய் நிற்கிறது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பால் இந்தியா முழுவதும் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், ஆதாரம் இல்லாமல் வாழ்பவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய ரஜினிகாந்த் கருத்து சங்பரிவார் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கிறார். கட்சியை தொடங்குவதற்கு முன்பு தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கபரிவார் அமைப்புகள் காலூன்ற முடியாது. ரஜினிகாந்த் ஏனோ தானோ என்று பேசாமல் திட்டமிட்டு இதுபோன்று பேசி வருகிறார்.
ராமர் கோவில் கட்ட தனி அறக்கட்டளை அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பாபர் மசூதி கட்ட தனி அறக்கட்டளை அமைத்து பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.